கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில், மூன்று பள்ளி மாணவர்களின் உயிரைப் பறித்து, பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியின் வேன், ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதில் இந்த கோர விபத்து அரங்கேறியது. வேன் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு முற்றிலும் உருக்குலைந்தது.
இந்த விபத்தில், சாருமதி (16) மற்றும் விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சாருமதியின் சகோதரர் செழியன் (15), புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. வேன் ஓட்டுநர் சங்கர் (47), மாணவர்கள் விஷ்வேஷ் (16), நிவாஸ் (13) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து விபத்திற்கு காரணமாக, கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியம் சுட்டிக்காட்டப்பட்டது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ், ரயில் வருவதை அறிந்து கேட்டை மூடியதாகவும், ஆனால் வாகன ஓட்டிகளின் அழுத்தத்தால் மீண்டும் திறந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, வேன் ஓட்டுநர் சங்கர், கேட் திறந்திருந்ததாகவும், பங்கஜ் அங்கு இல்லை என்றும் தெரிவித்தார். மாணவர் விஷ்வேஷ், விபத்துக்குப் பிறகும் கேட் கீப்பர் வரவில்லை என குற்றம்சாட்டினார். பொதுமக்கள் ஆத்திரத்தில் பங்கஜைத் தாக்க, போலீசார் அவரை மீட்டு, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கோர விபத்தை தொடர்ந்து, அனைத்து ரயில்வே கேட் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கேமராக்கள் பொருத்தப்படும் பகுதிக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய ஏர் இந்திய விமான விபத்து... வெளியானது உண்மை காரணம்...!
தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தின் சுவடுகள் மறைவதற்குள் சிவகங்கை மாவட்டத்தில் ரயில்வே கேட் மீது லாரி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்குறிச்சியில் மூடப்பட்டிருந்த ரயில்வே கேட் மீது லாரி மோதி மின்தடை ஏற்பட்டதால் அவ்வழியாக செல்ல இருந்த திருச்சி விருதுநகர் பயணிகள் ரயிலும், ராமேஸ்வரம் சென்னை விரைவு ரயிலும் முன்கூட்டியே நிறுத்தப்பட்டன. ரயில் ஊழியர்கள் மின் விநியோகத்தை சரி செய்த பின் இரு ரயில்களும் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டனர். லாரி மோதி ரயில்வே கேட்டிலிருந்து கம்பி மேலே சென்ற மின் உயர் மீது உரசியதால் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தினமும் பிரியாணி விருந்து... திருமங்கலத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த திமுக, அதிமுக...!