விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார்.

சிவகாசி செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரண நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!
மேலும், சிவகாசி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாகப் பட்டாசு ஆலைகள் எதுவும் செயல்படுகின்றனவா என்பது குறித்து உடனடியாகக் கள ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விதிமுறைகளை மீறிச் செயல்படும் சட்டவிரோதப் பட்டாசு ஆலைகளைக் கண்டறிந்து, அதன் உரிமையாளர்கள் மீது சட்டப்படி உரிய மற்றும் கடுமையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் இந்த உடனடி நிவாரண அறிவிப்பும் சட்டவிரோத ஆலைகளுக்கான ஆய்வு உத்தரவும் அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து..! வெடித்து சிதறும் பட்டாசுகள்... நெருங்க முடியாமல் மீட்பு பணிகளில் தொய்வு..!