தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்புப் பணிகளுக்கு இடையே, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவசர மருத்துவத் தேவைக்காகப் பயணிக்கும் பயணிகளுக்கு எவ்விதத் தடையுமின்றிப் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் சிறப்பு உதவி மையங்கள் மற்றும் அணுகல் உள்கட்டமைப்பு வசதிகள் போர்க்கால அடிப்படையில் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய இரு முக்கிய ரயில் முனையங்களில் தற்போது மெகா மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், பயணிகளின் வழக்கமான நடைபாதைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்பட்ட சில அசௌகரியங்களுக்குச் சென்னை கோட்டம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் எவ்வித சிரமமும் இன்றிப் பயணிக்க மாற்று ஏற்பாடுகளையும் கூடுதல் கட்டமைப்பு வசதிகளையும் விரிவுபடுத்தியுள்ளது.

அந்த வகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை நுழைவு வாயில் பகுதியில் பணிகள் நடைபெறுவதால், நடைமேடை எண் 11A-வைத் தவிர பிற நடைமேடைகளுக்கு அங்கிருந்து செல்லும் சக்கர நாற்காலி சேவை தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டு, காந்தி இர்வின் சாலைப் பக்க நுழைவு வாயிலிலிருந்து அனைத்து நடைமேடைகளுக்கும் சக்கர நாற்காலி மூலம் தடையின்றிச் செல்லும் வகையில் முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! சென்னை-போத்தனூர், தாம்பரம்-தென்காசி ரயில்கள் இயக்கம்!
எழும்பூர் வளாகத்தில் 18 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகளை ரயில் பெட்டி வரை பத்திரமாக ஏற்றிவிட பிரத்யேக உதவி எண்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பூந்தமல்லி சாலை மற்றும் காந்தி இர்வின் சாலைப் பகுதிகளை இணைக்கும் வகையில் 6 நகரும் படிக்கட்டுகள், 5 மின்தூக்கிகளுடன் கூடிய 18 மீட்டர் அகல பிரம்மாண்ட நடைமேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது; இப்பணிகள் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, தாம்பரம் ரயில் நிலையத்தில் 13 சக்கர நாற்காலிகள், சுமைகூலி தொழிலாளர்களின் சேவை விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தாம்பரம் நடைமேடை எண் 1A-விலிருந்து பயணிகளின் பயன்பாட்டிற்காகப் பேட்டரி கார்களைத் தற்காலிகமாக இயக்குவது குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்துள்ளது. அங்கு அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் லிஃப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய 8 மீட்டர் அகல நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை பயன்பாட்டிற்கு வரும்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் பயணம் மேலும் எளிதாகும்.
ஒட்டுமொத்தமாகச் சென்னை கோட்டத்தில் உள்ள சென்ட்ரல், கடற்கரை, மாம்பலம், பரங்கிமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட 118 ரயில் நிலையங்களிலும் சக்கர நாற்காலி வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் புறநகர் மற்றும் தொலைதூர ரயில் நிலையங்களில் 154 மின்தூக்கிகள், 65 நகரும் படிக்கட்டுகள் பயன்பாட்டில் உள்ளதோடு, பார்வையற்றோருக்கான தொடு உணர்வுத் தரைத்தளங்கள், தாழ்தளப் பயணச்சீட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை நகரும் படிக்கட்டுகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தி, பயண அமைப்பிற்கு முழு ஒத்துழைப்பும் பொறுமையும் வழங்குமாறு பயணிகளுக்குச் சென்னை ரயில்வே கோட்டம் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!