தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல் மற்றும் போத்தனூர் இடையே நவம்பர் 6 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்ட்ரலில் இரவு 11.55 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக போத்தனூர் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் நவம்பர் 9 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவை போத்தனூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை அக்டோபர் 29 காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
இதையும் படிங்க: இது உலகமகா கண்டுப்பிடிப்பு! நோபல் பரிசே கொடுக்கலாம்! அமைச்சர் ராஜீவ் பேச்சுக்கு செல்லூர் ராஜு விமர்சனம்!
அதேபோல் நவம்பர் 6 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதே வழித்தடத்தில் நவம்பர் 9 ஆம் தேதி இரவு 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவும் நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நேரத்தில் அதிக வருகை எதிர்பார்க்கப்படுவதால் முன்கூட்டியே தயாராக இருக்குமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பண்டிகை காலத்தில் ஆவினுக்கு வந்த சிக்கல்? நெய், வெண்ணெய் உற்பத்தி முடக்கம்? தீபாவளிக்கு முன் அரசு கவனிக்குமா?