தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்த்து, மாநிலத்தின் கலாச்சார, வரலாற்று மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முடிவு செய்தது.
இதற்காக, 2021-ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்நாட்டிற்கு பிரத்யேகமான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது.
இந்தக் குழு, ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி டி. முருகேசன் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்டு 2022-இல் அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இபிஎஸ் கொடுக்கிற சர்டிபிகேட் தேவையில்ல... அமைச்சர் ரகுபதி காட்டம்!
இதில் மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்துவதற்கு முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதற்காக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், மற்றும் பொது அமைப்புகளின் கருத்துகளைப் பெற்று, விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2024 ஜூலை மாதம், இந்தக் குழு 550 பக்கங்களைக் கொண்ட ஆங்கில அறிக்கையையும், 600 பக்கங்களைக் கொண்ட தமிழ் அறிக்கையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை, தமிழ்நாட்டின் கல்வி முறையைப் பாதுகாக்கவும், மாணவர்களுக்கு மன அழுத்தமற்ற, தரமான கல்வியை வழங்கவும் பல முக்கிய பரிந்துரைகளை முன்வைத்தது.

மாநில கல்விக் கொள்கையின் உருவாக்கம், தமிழ்நாட்டின் கல்வி முறையை தேசிய கல்விக் கொள்கையின் குறிப்பிட்ட அம்சங்களுக்கு எதிராக பாதுகாக்கும் முயற்சியாக அமைந்தது.
தேசிய கல்விக் கொள்கையில் முன்மொழியப்பட்ட மூன்று மொழிக் கொள்கை, 6-ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வி அறிமுகம், மற்றும் நுழைவுத் தேர்வுகள் ஆகியவை தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை மற்றும் மாநிலத்தின் தற்போதைய கல்வி அமைப்புக்கு முரணாக இருப்பதாக அரசு கருதியது.
மாநிலத்தின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மையப்படுத்திய கல்வி முறையை உருவாக்கவும் மாநில கல்விக் கொள்கையை உருவாக்கியது.
மாநில கல்விக் கொள்கையின் முக்கிய பரிந்துரைகளைப் பொறுத்தவரை, இது மாணவர்களுக்கு மன அழுத்தமற்ற மற்றும் உள்ளடக்கமான கல்வி முறையை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு கூடாது என மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளது. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை செய்துள்ளது
பள்ளிக்கல்விகள் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலை நிறுத்துவது அவசியம் என்றும் மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு கூடாது, நீட் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளிகடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: தரமற்ற தடுப்பணை... விவசாயிகள் வயித்துல அடிக்காதீங்க! நயினார் ஆவேசம்..!