சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில் தமிழ் மொழியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்திக்கு முதலிடம் அளித்திருக்கும் மத்திய அரசின் செயலுக்குத் தமிழகத் நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தென்னக ரயில்வேயின் இத்தகையப் போக்குத் தமிழ் மக்களின் மொழி உணர்வுகளைச் சீண்டும் செயல் என அவர் சாடியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரயில் நிலையத்தில் உள்ளப் பெயர்ப்பலகையில், இதுகாலம் வரை முதன்மையாக இருந்த தமிழ் மொழி தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பெயர்ப்பலகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு ரயில் நிலையத்தில், அந்த மண்ணின் மொழியான தமிழைச் சிறுமைப்படுத்தும் விதமாகத் தென்னக ரயில்வே நடந்து கொள்வது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இதையும் படிங்க: “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!
மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தென்னக ரயில்வே இத்தகைய மறைமுக இந்தித் திணிப்பு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியைத் திணிக்க முயல்வதை உடனடியாகக் கைவிட வேண்டும். "தமிழே முன்னவள்! மூத்தவள்! முதன்மையானவள்!" என்பதை ரயில்வே நிர்வாகம் உணர வேண்டும். உடனடியாக இந்தப் பெயர்ப்பலகையை அகற்றிவிட்டு, தமிழுக்கு முதலிடம் அளிக்கும் பழைய முறையையேப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். மொழிப் போரின் தியாகங்களை மறக்காதத் தமிழக மண், இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை எப்போதும் அனுமதிக்காது என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: மிஸ் பண்ணிடாதீங்க..!! பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்கலையா..?? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!!