இந்திய உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே மாதம் 14ம் தேதி பதவியேற்றார் பி.ஆர். கவாய் (பூஷன் ராமகிருஷ்ண கவாய்). மகாராஷ்டிராவின் அமராவதியில் பிறந்த இவர், பட்டியலின (SC) பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதியாவார். 2003-2019 வரை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2019 முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பரிந்துரையால் இப்பதவிக்கு உயர்ந்தார்.

உச்சநீதிமன்ற ஊழியர் நியமனங்களில் SC/ST இடஒதுக்கீட்டை முதல்முறையாக அமல்படுத்திய நீதிபதி கவாய், தேர்தல் நிதி பத்திரம் செல்லாது, வன்னியர் இடஒதுக்கீடு ரத்து, புல்டோசர் இடிப்புக்கு தடை உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். மேலும் நீதித்துறை சுதந்திரத்தை வலியுறுத்தி, ஓய்வுக்குப் பின் அரசு பதவிகளை ஏற்கமாட்டேன் என உறுதியளித்து, அரசியலமைப்பின் உயர்நிலையைப் பாதுகாப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!
சமீபத்தில், தெலங்கானாவின் ஐதராபாத் நகரில் நள்சார் சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய சட்ட அமைப்பு பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது எனவும், வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தாமதங்கள் சில சமயங்களில் பல தசாப்தங்களாக நீடிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
"பல வழக்குகளில், ஆண்டுகளாக சிறையில் இருந்தவர்கள் பின்னர் நிரபராதிகளாக அறிவிக்கப்படுகின்றனர். இந்த அமைப்பு சரிசெய்யப்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார். இளம் சட்ட வல்லுநர்கள் இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என அவர் ஊக்குவித்தார்.வெளிநாட்டில் முதுகலைப் படிப்புகளை (LLM) பயில விரும்பும் மாணவர்கள், குடும்பத்தின் நிதிச்சுமையை அதிகரிக்காமல் உதவித்தொகை மூலம் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

"வெளிநாட்டு பட்டம் உங்களின் தகுதியை நிர்ணயிப்பதில்லை. நேர்மையான வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுங்கள்," என்றார். மேலும், சட்டத்தின் அடிப்படைகளை வலுவாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும், வாழ்க்கையில் நண்பர்கள், குடும்பம், புத்தகங்கள், பொழுதுபோக்கு மற்றும் ஆரோக்கியத்தை முக்கிய தூண்களாகக் கருத வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தெலங்கானா பயணத்தின் போது ஏற்பட்ட தீவிர தொற்று காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் அவர் பணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி நாடு முழுவதும் அமல்..! சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!