அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க.வின் முக்கியப் பிரமுகரான செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனில், உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 8) மேலும் தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2014ஆம் ஆண்டில் போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி உட்படத் துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிங்க: ஆசிட் வீச்சு வழக்கில் 16 ஆண்டுகள் தாமதம்: "இது நாட்டிற்கே அவமானம்!" - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
2018 ஆம் ஆண்டில், மெட்ரோ போக்குவரத்து கழகத் தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர், வேலைகளைப் பெற்றுத் தரப் பலரிடம் லஞ்சம் பெற்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்படப் பலர் மீது புகார் அளித்தார். இதனையடுத்து, அவர் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், செந்தில் பாலாஜி இனிமேல் தேவைப்படும்போது மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அமலாக்கத்துறை (ED) விசாரணைக்காக அழைக்கும்போது, அவர் விலக்கு கோர விரும்பினால், அது குறித்துச் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம். செந்தில் பாலாஜி தரப்புக்கு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
வழக்கில் செந்தில் பாலாஜி இடைஞ்சலாக இருந்தால், அது குறித்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த வழக்கில் ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தளர்வு, அவருக்கு மேலும் நிவாரணம் அளிப்பதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? - தேர்தல் ஆணையம் விளக்கம்!