ஒட்டுமொத்தத் தமிழக அரசியல் களத்திலும் பெரும் விவாத அலைகளை ஏற்படுத்தியுள்ள கரூர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு வரும் ஜூலை 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் உத்தேசப் பட்டியலில் வரும் 13-ஆம் தேதி விசாரணைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு முக்கிய இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கரூர் உயிரிழப்பு வழக்கில் தற்போது விசாரணை வளையத்தில் இருக்கும் தற்போதைய முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் இந்த விவகாரம் குறித்துப் பொதுவெளியில் பேசுவதற்கும் அவதூறு பரப்புவதற்கும் முற்றிலுமாகத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும், கரூர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாகத் தற்போது சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இது குறித்துப் பொதுவெளியில் அவதூறான கருத்துகளைப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் திமுக தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!
ஏற்கனவே தமிழகத்தில் ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே கடுமையான அரசியல் போரும், வார்த்தை மோதல்களும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்த விவகாரம் தற்போது நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விசாரணையின் போது நீதிமன்றம் என்ன மாதிரியான உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!