கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இந்த விழாவானது 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது, தனது முதல் மாத சம்பளத்தை பிரேமா என்ற இளம்பெண் ஒருவர் மேடையில் வைத்து தந்தையிடம் வழங்கினார். அப்பா தான் எல்லாமே என்றும் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறியது பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த நிலையில், ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள் என்று தெரிவித்தார். உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி மகிழ்ச்சி கொள்வதாக கூறி இருந்தார்.
இதையும் படிங்க: ரூ.23 கோடியில் சுரங்கத்துறை அலுவலகம்... தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்த முதல்வர்...!
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். எத்தனையோ குழந்தைகளின் கனவுகள் டாஸ்மாக்கில் அப்பாக்கள் குடிப்பதினால் கலைந்து போய் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். பல குடும்பங்கள் அழும் குடும்பங்களாக நிரந்தரகண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன என்றும் 24 மணி நேர நாடக நடவடிக்கை இதற்கும் எடுத்து பல குடும்பங்களை காப்பாற்றினால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்.
குடிக்கும் சமுகத்தை ஆதரித்துவிட்டு நீங்கள் எப்படி படிக்கும் சமூகத்தை முழு வெற்றி அடைய வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய தமிழிசை சௌந்தரராஜன், சிலரின் சாதனைகளை வெளிப்படுத்தினீர்கள்., பலரின் சாதனை நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார். வேதனைகள் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது., நீங்கள் பொய் வாக்குறுதி கொடுத்து வாக்குகள் வாங்கியதை மனதில் வைத்து குடிக்கு ஒரு முடிவு கட்டுங்கள் பின்பு படிக்கும் குழந்தைகள் இன்னும் லட்சக்கணக்கில் சாதனை புரிவார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: இனி ஒழுகும் வீட்டின் கவலை வேண்டாம்... பிரேமாவிற்கு வீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு...!