ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, தனது வருமானத்தை மறைத்து சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு பதிலளிக்கக் கோரி அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் போது நவாஸ்கனி தாக்கல் செய்த வேட்புமனுக்களில் உள்ள சொத்து விவரங்களில் பெரும் முரண்பாடுகள் இருப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் நிறுவன இயக்குநர் என்ற வருமானத்தைத் தவிர வேறு வருவாய் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தாலும், அவருக்கு 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாகத் திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். வருமான வரித்துறையிடம் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், சிபிஐ விசாரணை கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தப் புகார்கள் குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான விளக்கம் அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது. மக்கள் பிரதிநிதியின் சொத்து மதிப்பு திடீரென உயர்ந்துள்ள விவகாரத்தில் சட்டத்தின் பிடி இறுகத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: “விதி திரைப்பட சுஜாதாவே எனக்கு உந்துதல்!” - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா நெகிழ்ச்சி!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் முக்கியப் புள்ளியான நவாஸ்கனி மீதான இந்தப் புகார், ராமநாதபுரம் தொகுதியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறையின் பதிலைப் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பள்ளிக்கரணையில் கட்டுமானம் கட்ட தடை நீக்கம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!