சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கும் இந்த ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். வரும் 20-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டசபைக் கூட்டத் தொடரில் கவர்னர் ஆர்.என். ரவி நிகழ்த்தவுள்ள உரை குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் உரையைப் புறக்கணித்த கவர்னர், இந்த ஆண்டு முழுமையாக வாசிப்பாரா? அல்லது மீண்டும் மோதல் போக்கு ஏற்படுமா? என்ற சந்தேகம் நிலவி வரும் சூழலில், அரசின் நிலைப்பாடு குறித்து இதில் இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும், தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், பல்வேறு அதிரடி அறிவிப்புகளுக்கு ஒப்புதல் வழங்க இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகஅமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூடும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு’ (TAPS) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இதற்காக வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும், அதன் மூலம் தேர்தல் களத்தில் அரசு ஊழியர்களின் ஆதரவைத் தக்கவைப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும். கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்குச் சட்டசபையில் தகுந்த தரவுகளுடன் பதிலடி கொடுக்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார்.
இதுமட்டுமன்றி, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசின் சாதனைகளைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வது மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர்களுக்குச் சில முக்கியக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட உள்ளன. பொங்கல் பரிசுத் தொகை விநியோகம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் குறிப்பிடத்தக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: "அரசியல் ஆதாயம் தேடாதீங்க!" நேரத்தை வீணடிக்க விரும்பல! பாஜக தலைவரின் புகாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!
அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பிந்தைய அரசியல் சூழலில், முதலமைச்சரின் இந்த அதிரடி அமைச்சரவைக் கூட்டம் திமுக தரப்புக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இன்றைய கூட்டத்தின் முடிவில், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதமான பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “சித்ரா ஐயரின் இல்லத்தில் சோகம்!” பாடகியின் சகோதரி ஓமனில் விபத்தில் காலமானார்!