தமிழக அரசின் நிதி நிலை குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டார். தவெக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் வரவு செலவு கணக்குகள், தற்போதைய நிதி நிலைமை மற்றும் கடந்த திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. அறிக்கை வெளியீட்டின் போது பேசிய அமைச்சர் மரிய வில்சன், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளதாகவும், சொந்த வரி வருவாய் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி தமிழக அரசின் நேரடி கடன் மட்டும் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.78 ஆயிரத்து 324 கோடியாக நீடிக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். முந்தைய அரசு முதலீடுகளுக்காக அல்லாமல், அன்றாட செலவுகளுக்காகவே அதிக அளவில் கடன் வாங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.67,050 கோடியை வட்டியாக மட்டுமே செலுத்தி வருவதாகக் கூறினார். இதன் மூலம் அரசின் ஒட்டுமொத்த செலவினங்களில் 22.8 சதவீதமும், மாநிலத்தின் சொந்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கும் வட்டி செலுத்துவதற்கே செலவாகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால், மாநிலத்தின் உண்மையான மொத்தக் கடன் பொறுப்பு ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 934 கடன் சுமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2021 முதல் 2026 வரையிலான ஐந்தாண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் ரூ.4.87 லட்சம் கோடி கடன் சேர்ந்துள்ளது என்றும், இது சுதந்திரத்திற்குப் பிறகு 60 ஆண்டுகளில் பெற்ற மொத்த கடனை விட அதிகம் என்றும் வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனிம வளத்துறை ஊழலால் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு குறைந்ததாலும் மாநில வருவாய் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும், மின் துறையில் ரூ.2.47 லட்சம் கோடி கடனும், மின் வாரியத்தில் ரூ.1.82 லட்சம் கோடி நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள் ரூ.72,667 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன என்றும், அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.78.81 செலவாகும் நிலையில், வருவாயாக ரூ.25.97 மட்டுமே கிடைப்பதாகவும் அமைச்சர் விளக்கினார். கடனைக் குறைக்க கடந்த 20 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததே தற்போதைய நிதி சார்ந்த அவசர நிலைக்குக் காரணம் என்றார்.
இதையும் படிங்க: 8-ம் வகுப்பு வரை விரிவாக்கப்படும் காலை உணவு திட்டம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் வருவாய் ஈட்டுவோர் சதவீதம் குறைந்து, சார்ந்து இருப்போர் மற்றும் முதியோர்களின் சதவீதம் மிக வேகமாக அதிகரித்து வருவதால், தமிழகம் செல்வந்தர்கள் மாநிலமாக உருவாவதற்கு முன்பே முதியோர் மாநிலமாக உருவாகும் சூழல் உள்ளதாக வெள்ளை அறிக்கை கவலை தெரிவிக்கிறது. இருப்பினும், தமிழகத்தின் பெருமைமிக்க பாரம்பரியமான நலத்திட்டங்கள் தொடர்ந்து தொய்வின்றிச் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். இனிவரும் நாட்கள் சவாலானவை என்றாலும், ஊழலை ஒழிப்பதன் மூலமும், நேர்மையான நிர்வாகத்தின் மூலமும் தமிழகத்தின் வருவாயைப் பெருக்கி இந்த இழப்புகள் அனைத்தையும் தவெக அரசு நிச்சயம் சரிசெய்யும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "தவெக யாரைக் காப்பாற்ற நினைக்கிறது?" - ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி!