தமிழகப் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் இரண்டாம் முறையாக நிறைவேற்றம் செய்து ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் தனக்குரிய சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் தமிழக அரசின் அரசிதழ்களில் வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

இதன்மூலம், தமிழகப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் பிரிவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் கே. வெங்கடாசலபதி பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கும் வகையில் 1994ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் நிலுவையில் உள்ளது. அதை திரும்ப பெறாமல் புதிதாக சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானது.
இதையும் படிங்க: துணைவேந்தர் நியமனத்தில் குடுமிப்பிடி சண்டை..! மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் வைத்த ட்விஸ்ட்..!

மேலும், இந்தச் சட்ட திருத்தங்களுக்கான தீர்க்கமான காரணங்கள் எதுவும் தமிழக அரசால் தெரிவிக்கப்படவில்லை. பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அந்த அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளதா, அமைச்சரவைக்கு உள்ளதா அல்லது மாநில அரசின் நிர்வாக தலைவரான ஆளுநருக்கு உள்ளதா என்பது குறித்தும் தெளிவுபடுத்த வில்லை. தமிழக அரசின் இந்தச் சட்ட மசோதாக்கள், பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) விதிகளுக்கு எதிராகவும் உள்ளன. எனவே, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான இந்த மசோதாக்கள் சட்ட விரோதமானவை என அறிவிக்க வேண்டும்" என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: துணைவேந்தர்கள் மாநாடு.. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதலா.? அவசரமாக அறிக்கை வெளியிட்ட ஆளுநர் மாளிகை!