நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்குவெளி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. இந்த டாஸ்மாக் கடை பள்ளி அருகில் இயங்கி வந்ததால், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அப்பகுதி மக்கள், குறிப்பாக பெண்கள் பல மாதங்களாகப் புகார் அளித்து வந்தனர்.
இருப்பினும், அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடை முன்பு திரண்டு ஆவேச முற்றுகைப் போராட்டம் நடத்தினர். முதல்வர் விஜய் தலைமையிலான அரசு டாஸ்மாக் கடைகளை பள்ளி, கோயில் அருகில் இருப்பவற்றை அகற்ற உத்தரவிட்ட நிலையிலும் இந்தக் கடை அகற்றப்படாதது மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது.

போராட்டத்தின்போது அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 30 நாட்களுக்குள் கடையை அகற்றுவதாக அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படும் முன்பே கடைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பல்வேறு ஊகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை மக்களின் கோபத்தின் வெளிப்பாடாகக் கருதினாலும், அதிகாரிகள் இதை தீ வைப்பு சம்பவமாகப் பார்த்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். கடையின் உள்ளே அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதி முழுவதும் தீயால் முற்றிலும் சேதமடைந்தது. மதுபான பாட்டில்கள் மற்றும் பொருட்கள் பெரும் அளவில் எரிந்து நாசமானதால் பொருள் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுக்கடைகளுக்கு செக்.! செம்ம ஸ்பீடு... ஒரே வாரத்தில் 513 டாஸ்மாக்கை மூடிய விஜய் அரசு..!