தமிழகத்தில் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பணியில் உள்ள ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 2028 ஆகஸ்ட் 31க்குள் தேர்ச்சி பெறாதவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
ஓய்வுக்கு ஐந்து ஆண்டுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் இந்த தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வுகளை நடத்த முடிவு செய்தது. 2026 ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் இந்த சிறப்பு தேர்வு நடைபெற்றது. இதில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிந்தபின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தன. ஆனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களைக் குறைக்கக் கோரி சில ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 8ஆம் தேதி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அரசின் கொள்கை முடிவை தெரிவிக்கும் வரை முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது. அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் தேர்வு முடிவுகள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக வெளியாகாமல் நின்றன.இந்த தாமதம் ஆசிரியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வெளுக்கப்போகுது மழை...! 23 மாவட்டங்களில் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..!!
உச்சநீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடு நெருங்கி வருவதால் மேலும் தாமதம் ஏற்பட்டால் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்ற அச்சம் பரவியது. ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முடிவுகளை உடனடியாக வெளியிட வலியுறுத்தினர். கூடுதல் தேர்வுகளை நடத்தவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் வரம்பை மேலும் குறைக்கவும் கோரிக்கைகள் எழுந்தன.இந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்கியது. முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த உத்தரவு ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்... வினாக்கள் - விடைகள்..!! அமைச்சர்கள் பதிலுரை..!!