நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் ரிலீஸிற்குத் தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, படக்குழுவினர் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி வரும் மே 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்திற்குச் சிறப்புச் சலுகையாக, மே 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களுக்குக் காலை 9 மணி முதல் நள்ளிரவைத் தாண்டி இரவு 2 மணி வரை காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ளலாம் எனத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த கூடுதல் காட்சிகள் குறித்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக முதலமைச்சர் விஜய்க்கு Z+ பிரிவு பாதுகாப்பு..!!
'கருப்பு' திரைப்படம் உருவான பிறகு ஓடிடி உரிமை விற்பனை உள்ளிட்ட சில காரணங்களால் பல மாதங்களாக முடங்கிக் கிடந்தது. தற்போது அந்தப் பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாக முடிந்து, வழக்கறிஞர் மற்றும் கருப்பண்ணசாமி என சூர்யா இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது.
சூர்யாவின் நெருங்கிய நண்பரான விஜய், தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், சூர்யாவின் படத்திற்கு இத்தகைய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருப்பது கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யமாகப் பார்க்கப்படுகிறது. "தமிழக அரசுக்கும், தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் விஜய்க்கும் எங்களது நன்றிகள்" எனப் படக்குழுவினர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற பிறகு திரைத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள முதல் பெரிய சலுகை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று முதல் CM சீட்டில்.. வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி..!! நன்றி கூறிய தமிழக முதலமைச்சர் விஜய்..!!