தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) ஆரம்பத்தில் இருந்தே புகைந்து கொண்டிருந்த உட்கட்சி மோதல்கள் இப்போது ஒவ்வொன்றாக வெடித்து வருகின்றன. மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த 106 பேருக்கு சட்டசபைத் தேர்தலில் சீட் கொடுத்ததால், கட்சியின் அடித்தள நிர்வாகிகள், குறிப்பாக 62 மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுக்கு சீட் கிடைக்காதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தேர்தல் முடிவில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 49 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் 7 பேர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். இதனால் பழைய நிர்வாகிகளுக்கும், புதியவர்களுக்கும் இடையே பதவி, அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலர் அருள்ராஜுக்கு சீட் மறுக்கப்பட்டு, தி.மு.க.வில் இருந்து வந்த விஜிக்கு சீட் தரப்பட்டது. விஜி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனதோடு மாவட்ட செயலர் பதவிக்கும் முயற்சி செய்ததால் பிரச்னை வெடித்தது. அருள்ராஜ் ஆதரவாளர் சபரியை விஜி கெட்ட வார்த்தைகளால் திட்டிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பணியிட மாறுதலுக்கு லஞ்சம்? திராவிட கட்சிகளின் நடைமுறைக்கு வேட்டு! தவெக அதிரடி துவக்கம்!
சிவகாசியில் கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே போட்டியிட்ட கீர்த்தனா அமைச்சரானார். இதனால் அங்குள்ள விருதுநகர் வடமேற்கு மாவட்ட செயலர் மாரிசெல்வத்துக்கு சீட் கிடைக்கவில்லை. இப்போது அமைச்சர் நிகழ்ச்சிகளுக்கு மாரிசெல்வத்துக்கு அழைப்பே இல்லை. முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழாவில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.

தென்சென்னை வடக்கு மாவட்ட செயலர் அப்புனு, தி.நகர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளில் பொதுச் செயலர்கள் போட்டியிட்டதால் சீட் இழந்தார். இப்போது அந்த இருவரும் அமைச்சர்களாகி ‘பவர்புல்’ ஆகிவிட்டதால் அப்புனு முழுமையாக ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளார்.
தென்சென்னை தெற்கு மாவட்ட செயலர் தாமு விரும்பிய வேளச்சேரி மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளை புதியவர்கள் கைப்பற்றினர். ராயபுரத்தில் இருந்து வென்ற தாமு, அமைச்சர்களின் ஆதிக்கத்தால் மாவட்டத்தில் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறார். ராயபுரத்தில் தாமு வருகையால் வடசென்னை தெற்கு மாவட்ட செயலர் ‘கட்பீஸ்’ விஜயராகவனுடன் பனிப்போர் மூண்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, கோவை, நாமக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதேபோன்ற உட்கட்சி மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. மாற்றுக் கட்சியினரின் வருகையும், அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும் பழைய நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க. வட்டாரங்கள் இந்தப் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. இல்லையெனில் கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட வரும் தேர்தல்களில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்!