பிரேசில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். சர்வதேச அரங்கில் குளோபல் சவுத் நாடுகளுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என பேசிய அவர், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதம் குறித்தும் கடுமையாக சாடி பேசினார். இது குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:
மேற்கு ஆசியா துவங்கி ஐரோப்பா வரை உலகம் முழுதும் பதற்றமும், பிரச்னைகளும் சூழ்ந்துள்ளன. காசாவில் நிலவும் பதற்றம் மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. புத்தரும், காந்தியும் பிறந்த மண் இந்தியா. சூழல்நிலையும், பாதையும் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அமைதி என்பது எப்போதும் கடைபிடிக்கப்பட வேண்டும். நாங்கள் எந்த சூழலியும் போரை விரும்புவதில்லை, ஆதரிப்பதும் இல்லை.

அமைதி பேச்சு, ஒத்துழைப்பின் அடிப்படையில் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம். இப்படிப்பட்ட சூழலில் நட்பு ரீதியான அனைத்து நாடுகளுடன் இந்தியா முழு ஒத்துழைப்புடன் செயல்பட தயாராக உள்ளது.
இதையும் படிங்க: கெடு விதிக்கும் ட்ரம்ப்.. அடங்கிப்போவாரா மோடி! ராகுல்காந்தி சவாலால் ஆட்டம் காணும் பாஜக!
பயங்ரவாதத்திற்கு ஆதரவாக நிதி உதவி செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், பயங்கரவாததத்தை ஆதரிப்பவர்களையும் ஒரே தராசில் நிறுத்த முடியாது. தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக, பயங்கரவாதத்திற்கு எதிராக அமைதி காப்பதும், அவர்களை ஆதரிப்பதையும் ஏற்க முடியாது. பயங்கரவாத எதிர்ப்பு என வரும் போது சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது. அப்படி வேறுபாடு இருந்தால், பயங்கரவாதத்தை தீவிரமாக எதிர்க்கிறோமா என்ற கேள்வி நம்முன் நிற்கும்.

மனிதநேயத்திற்கு எதிரான மிகப் பெரிய ஆயுதமாக பயங்கரவாதம் உருவெடுத்துள்ளது. சமீபத்தில் அப்படிப்பட்ட கொடூர தாக்குதலை தான் இந்தியா எதிர்கொண்டது. ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் இந்தியாவின் ஆன்மா, அடையாளம், கவுரவத்தின் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அது இந்தியாவின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த மானுடத்தின் மீதான தாக்குதல். அந்த கொடூர சம்பவத்தின் போது பயங்கரவாதத்திற்கு எதிராக எங்களுடன் துணை நின்ற நட்பு நாடுகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

பயங்கரவாதத்தை எதிர்ப்பது நம் கொள்கையாக இருக்க வேண்டும். வெறும் சப்பை கட்டும் செயலாக இருக்கக் கூடாது. எந்த நாட்டின் மீது, யார் எதற்காக தாக்குதல் நடத்தினார்கள் என்பதை ஆராய வேண்டும்.
இதையும் படிங்க: பிரேசில் பறந்தார் பிரதமர் மோடி.! பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தானை கதறவிட காத்திருக்கும் சம்பவம்!!