தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி விவகாரத்தில் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தே.மு.தி.க.வின் கூட்டணி முடிவு தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தை பிறந்த பிறகு அதிரடியான கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தே.மு.தி.க.வை 2005-ம் ஆண்டு தொடங்கிய விஜயகாந்த், 2006 சட்டமன்றத் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகளைப் பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றார். ஆனால் அதன் பிறகு கடந்த 15 ஆண்டுகளாக கட்சி தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் வரும் தேர்தலில் கட்சியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பிரேமலதா தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் மேல்சபை எம்.பி. தேர்தல் நடந்தபோது தே.மு.தி.க.வை புறக்கணித்து, இரண்டு அ.தி.மு.க.வினரை மட்டும் அனுப்பியது. இதனால் கோபமடைந்த தே.மு.தி.க. கடும் விமர்சனம் செய்தது. பின்னர் இந்த மாதம் ஒரு மேல்சபை எம்.பி. பதவி தருவதாக அ.தி.மு.க. மீண்டும் உறுதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: பெண் எரித்துக் கொலை..! செயலிழந்து கிடக்கும் திமுக அரசு.. TVK கடும் கண்டனம்..!

சமீபத்தில் நடைபெற்ற தே.மு.தி.க. மாநாட்டில் பிரேமலதா கூட்டணி குறித்து “விரைவில் அறிவிப்போம்” என்று மட்டுமே கூறினார். இது கட்சியின் திட்டமிட்ட வியூகம் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். “மற்ற கட்சிகள் இன்னும் கூட்டணி முடிவெடுக்காத நிலையில் நாம் ஏன் அவசரப்பட வேண்டும்?” என்று ஒரு மூத்த நிர்வாகி கேள்வி எழுப்பினார்.
கடந்த தேர்தல்களில் ஆதரவு தந்து ஏமாற்றப்பட்ட அனுபவம் தே.மு.தி.க.வினருக்கு உள்ளது. எனவே இம்முறை இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்ற நிபந்தனையை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சி அலுவலகத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க. உடன் கூட்டணி வேண்டும் என்று வாக்களித்ததாகவும், ஆனால் அ.தி.மு.க. கூட்டணியை தொடர வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்ததாகவும் தெரிகிறது. விஜய் கட்சியுடன் கூட்டணி என்று மிகச் சிலரே ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணியில் தக்கவைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதேநேரம் தி.மு.க. தரப்பிலும் தே.மு.தி.க.வை தங்கள் அணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், மேல்சபை எம்.பி. பதவி உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய சிக்கலான சூழலில், தை பிறந்த பிறகு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி தொடர்பான அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: மும்பை: நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு..!! 3 பேர் உடல் கருகி பலியான சோகம்..!!