தமிழ்நாடு அரசு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை முதன்மையாகக் கருதி, “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் நேரடியாக வினியோகிக்கப்படுகின்றன. இதனால், நியாய விலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.

இத்திட்டம் முதற்கட்டமாக, 34,809 நியாயவிலைக் கடைகள் மூலம் 15.81 லட்சம் குடும்ப அட்டைகளில் உள்ள 20.42 லட்சம் முதியவர்கள் மற்றும் 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21.70 லட்சம் பயனாளிகளுக்கு சேவையாற்றுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு மற்றும் ePoS இயந்திரங்களுடன் கூடிய மூடிய வாகனங்களில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் இந்தப் பொருட்களை வழங்குவர்.
இதையும் படிங்க: இனி வீடு தேடி ரேஷன் பொருட்கள்.. தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை தண்டையார்பேட்டையில் தொடங்கி வைத்தார். மேலும் இது திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலன் சார்ந்த மற்றொரு மைல்கல் என குறிப்பிட்ட அவர், கொருக்குப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வீட்டிற்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இந்நிலையில் சென்னையில், தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று, 13.09.2025 முதல் 16.09.2025 வரை பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளின் அறிவிப்புப் பலகையிலிருந்து விநியோகத் தேதியினை அறிந்து கொள்ளலாம். இத்திட்டத்தினை மேற்குறிப்பிட்ட பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
* 13.09.2025, 14.09.2025 மற்றும் 15.09.2025 (மூன்று நாட்கள்) மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர்
13.09.2025, 14.09.2025, 15.09.2025 மற்றும் 16.09.2025 (நான்கு நாட்கள்) திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர். அண்ணா நகர் மற்றும் ஆலந்தூர்
இதையும் படிங்க: நாளை 11 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..??