தேனி மாவட்டம் சேக்கம்பட்டி சிறைச்சாலையிலிருந்து காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற 17 கைதிகளில் 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எஞ்சிய நான்கு கைதிகளைப் பிடிப்பதற்காக, சிறைச்சாலையின் பின்புறம் உள்ள அம்மாச்சியாபுரம் மலை மற்றும் வனப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேக்கம்பட்டி மாவட்டச் சிறைச்சாலையிலிருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறையினர், இதுவரை 13 பேரைப் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில் எட்டு பேர், வனப்பகுதியை ஒட்டிய ஒரே இடத்தில் பதுங்கியிருந்தது ட்ரோன் கேமராக்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட கைதிகளிடம் இரண்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறைச்சாலையின் பின்புறம் உள்ள அம்மாச்சியாபுரம் மலைப்பகுதியில் தாங்கள் பதுங்கியிருந்ததாகவும், தப்பிச் சென்ற எஞ்சிய நான்கு பேரும் அதே பகுதியில் இருக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சினிமா பாணியில் நடந்த ‘ஜெயில் பிரேக்’... தப்பிய கைதிகளை தூக்க போலீஸ் போட்ட ‘ஹைடெக் ஸ்கெட்ச்’...!
இதையடுத்து, நேற்று இரவே அந்த மலைப்பகுதியைக் காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். தொடர்ந்து, இன்று காலை மலையின் நான்கு புறங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான போலீசார் மலைப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
எஞ்சியுள்ள நான்கு கைதிகளான மீனாட்சிசுந்தரம், பொன்முத்துச்செல்வம், முத்து இளங்கோவன் மற்றும் ரெஜின் ஆகியோரைப் பிடிப்பதற்காகத் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த நக்சல் தடுப்புப் பிரிவு போலீசாரும் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மலை மற்றும் வனப்பகுதி முழுவதும் ட்ரோன் கேமராக்கள் உள்ளிட்ட உதவிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைதிகள் பதுங்கியிருக்கக்கூடும் எனக் கருதப்படும் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கைதிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எஞ்சிய நான்கு பேரையும் விரைவில் பிடித்துவிடலாம் எனக் காவல்துறை தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் இருக்கும் இடம் இன்னும் உறுதியாகத் தெரியாததால், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 13 கைதிகளில் ஐந்து பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நான்கு கைதிகளையும் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் தேனி சிறையில் நடந்தது என்ன?... கைதிகள் தப்பியோட மிக முக்கிய காரணம் இதுவா?