தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நான்கு கைதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 13 பேரைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, பணியில் இருந்த எட்டு சிறைக் காவலர்கள் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் நாகேந்திரன் உள்ளிட்ட ஒன்பது பேர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் மாவட்டச் சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்றனர். தப்பியோடிய கைதிகள் வழிப்பறி, சங்கிலிப் பறிப்பு, இருசக்கர வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு வலிப்பு ஏற்பட்டதைப் போல நாடகமாடி, அவர்களைப் பார்க்கச் சென்ற காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மூன்று அடுக்குப் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையில், சம்பவத்தின்போது குறைந்த எண்ணிக்கையிலான காவலர்களே பணியில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விதிகளின்படி, 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சிறையில் 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், நான்கு அல்லது ஐந்து காவலர்களே பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கைதிகள் பிரதான வாயில் வழியாகத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: தேனி சிறையில் பேரதிர்ச்சி... காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோட்டம்... நடந்தது என்ன?
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பியோடிய கைதிகளைப் பிடிப்பதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை பிரவீண், சிலம்பரசன், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 13 பேரையும் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேக்கம்பட்டி சிறைச்சாலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அரசு பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் கேரள எல்லையை ஒட்டியுள்ளதால், கேரளாவுக்குச் செல்லும் வழித்தடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள கிராமங்கள், தோட்டப் பகுதிகள் மற்றும் புதர்கள் நிறைந்த இடங்களில் கைதிகள் பதுங்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு ட்ரோன் கேமரா சுமார் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அடுத்தடுத்த பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தப்பியோடிய கைதிகள் இருசக்கர வாகனத் திருட்டு, சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்பதால், அவர்கள் வாகனங்களைத் திருடித் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அந்தப் பகுதிகளில் வாகனத் திருட்டு அல்லது சங்கிலிப் பறிப்பு சம்பவங்கள் ஏதேனும் நடைபெற்றுள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, தப்பியோடிய கைதிகளில் நான்கு பேர் பிடிபட்டுள்ள நிலையில், அவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் எவ்வாறு தப்பிச் சென்றனர், மற்ற கைதிகள் எங்கு பதுங்கியிருக்கலாம், வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனரா என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறையில் பணியில் இருந்த எட்டு காவலர்கள் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் நாகேந்திரன் உள்ளிட்ட ஒன்பது பேர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தேனி மாவட்டச் சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிரதாரி, திண்டுக்கல் எஸ்பி ஜெயக்குமார், தேனி எஸ்பி பிரவீன் கௌதம், சிறைத்துறை எஸ்பி கிருஷ்ணராஜ், டிஐஜி முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் ஏற்கெனவே சிறை வளாகத்தில் ஆலோசனை நடத்தினர். தற்போது மதுரை டிஐஜி அபினவ் குமார் மற்றும் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரும் சிறை வளாகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பிச் சென்ற சம்பவம் சிறைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், தப்பியோடிய மீதமுள்ள 13 கைதிகளையும் விரைவாகக் கைது செய்யக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆபத்து... ஆபத்து...!! - இந்த பக்கம் வராதீங்க... முக்கிய மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிப்பு...!