தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசு நிர்வாகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது தொடர்பாக திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறக் கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உரிய சேவைகள் லஞ்சமின்றி கிடைக்க வேண்டும் என்பதை அரசின் முக்கிய நோக்கமாக முன்வைத்து, லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் சமீபத்தில் கரூர் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, லஞ்சம் கோரும் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் துணிவுடன் நின்று புகார் அளிக்க வேண்டும் என்றும், அரசு அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் என்றும் வலியுறுத்தினார்.

தென்காசி மாவட்டத்தில் ஒரு முக்கிய சம்பவம் அண்மையில் அரங்கேறியுள்ளது. செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பகுதியைச் சேர்ந்த மாடசாமி (52) என்பவர் தன் மனைவி ஆறுமுகத்தம்மாள் பெயரில் உள்ள 2.28 சென்ட் நிலத்துக்கு தனிப்பட்டா பெற விண்ணப்பித்திருந்தார். இந்த மனுவை செயல்படுத்த நில அளவையர் (சர்வேயர்) ராமர்செல்வம் (37) என்பவர் ரூ.10,000 லஞ்சம் கோரினார். லஞ்சம் கொடுக்காவிட்டால் மனுவை தள்ளுபடி செய்துவிடுவதாகவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விவசாயிகளிடம் வசூல் சர்ச்சை... தவெக ஒழுங்கு நடவடிக்கை..! கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலர் அதிரடி நீக்கம்..!!
இந்தச் சம்பவத்தை அறிந்த மாடசாமி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, புகார்தாரருடன் இணைந்து சர்வேயரை பொறியில் வீழ்த்தினர். ரூ.10,000 லஞ்சப் பணத்தைப் பெறும் போது சர்வேயர் ராமர்செல்வம் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த லஞ்சப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தென்காசி மாவட்ட அரசு அலுவலக வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பணியிட மாறுதலுக்கு லஞ்சம்? திராவிட கட்சிகளின் நடைமுறைக்கு வேட்டு! தவெக அதிரடி துவக்கம்!