திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை மிகக் கோலாகலமாகச் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வண்ண மின்விளக்குகளாலும், நறுமண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுத் திருமலை ஜொலிக்கும் வேளையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா’ முழக்கத்துடன் வைகுண்ட வாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பகல் பத்து உற்சவம் நிறைவடைந்து இன்று முதல் ராபத்து உற்சவம் தொடங்கியுள்ள நிலையில், தங்க ரதத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். டோக்கன் இல்லாத பக்தர்களுக்காகத் திருமலையில் சிறப்புத் திரையரங்குகள் மற்றும் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுத் தேவஸ்தானம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருப்பதி திருமலையில், வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா இன்று மிகுந்த ஆச்சாரத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 1.45 மணியளவில் ஜீயர்கள் முன்னிலையில், அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருப்பாவை பாசுரங்கள் சேவிக்கப்பட்டு வைகுண்ட வாயில் எனும் ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஏழுமலையான் மற்றும் சொர்க்கவாசல் வழியாகச் சென்று பரமபத நாதனைத் தரிசிக்கக் காத்திருந்த முக்கியப் பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!
தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தனது குடும்பத்தினருடன் அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் ஆந்திர மாநில துணைச் சபாநாயகர் ரகுராமகிருஷ்ண ராஜு, அமைச்சர்கள் பய்யாவுலு கேசவ், அச்சன்நாயுடு உள்ளிட்டோரும் தரிசனம் மேற்கொண்டனர். தரிசனம் முடிந்த பின், ரங்கநாயக்க மண்டபத்தில் அவர்களுக்கு வேத ஆசீர்வாதங்களுடன் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. காலை 9 மணியளவில், தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருள, ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாட வீதிகளில் ரத உற்சவம் கண்கவர் நிகழ்வாக நடைபெற்றது.

கோவில் முழுவதும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களைக் குறிக்கும் மின் அலங்காரங்கள் மற்றும் வெளிநாட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைகுண்டத்தை நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் டோக்கன் இல்லாத பக்தர்களுக்காக, ஏழுமலையான் கோவில் எதிரே ஏழு தலை ஆதிசேஷன் மீது மகாவிஷ்ணு சயனித்திருக்கும் பிரம்மாண்ட மலர் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 5 மணிக்குத் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. ஜனவரி 8-ஆம் தேதி நள்ளிரவு வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும், ஜனவரி 2-ஆம் தேதி முதல் டோக்கன் இல்லாத பக்தர்கள் நேரடி தர்ம தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் லட்டு பிரசாதங்கள் மற்றும் குடிநீர் வசதிகள் போர்க்கால அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!