அதிமுக பொதுக்குழுவால் நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்றும், இதுகுறித்து 10 நாட்களுக்குள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். மறுநாளே அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தூக்கியடித்த எடப்பாடி பழனிசாமி, அவரது கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதையும் மறைமுகமாக உணர்த்தினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை அதிமுகவிற்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வர உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற ஒருங்கிணைந்த அதிமுக தான் சரியான வழி என கடைக்கோடி தொண்டர்கள் வரை செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்துள்ளனர். மேலும் தமிழகத்தின் பலேறு பகுதிகளிலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி முழுவதும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள், ஒன்றிணைவோம், வெற்றி பெறுவோம் என்ற தலைப்பில், திருமங்கலம் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
இதையும் படிங்க: செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்கள் திடீர் பல்டி... முக்கிய புள்ளியைச் சந்திக்க சாரை சாரையாய் வாகனங்களில் பயணம்...!
அந்த போஸ்டரில், ஒன்றிணைவோம் ,வெற்றி பெறுவோம், அண்ணா திமுக கடைகோடி தொண்டர்களின் உள்ள குமுறல்களை வெளிப்படுத்திய கழகத்தின் உண்மை விசுவாசி செங்கோட்டையன் அவர்களின் கருத்தை வலுப்படுத்துவோம், பத்து நாள் கெடுவுக்குள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே தானே முன்னின்று தலைவர்கள் உருவாக்கிய கட்சியையும், தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டும். இதுவே உங்களுக்கு கடைக்கோடி தொண்டர்களின் கடைசி அழைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
போஸ்டருக்கு கீழே அதிமுக கிளை கழகச் செயலாளர் செல்வம் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. அத்துடன் போஸ்டரில் அண்ணா எம்ஜிஆர் ,ஜெயலலிதா, சசிகலா, பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரது படங்களும் இடம் பெற்றிருப்பது அதிமுக வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING எடப்பாடியால் தொலைந்த மன நிம்மதி... செங்கோட்டையன் எடுத்த திடீர் முடிவு... அதிரும் அதிமுக...!