மதுரை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தடை விதித்தது மக்கள் மனதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தப் பிரச்னை ஒவ்வொரு மக்களின் மனதிலும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்டது மிகப்பெரிய தவறு என்று கூறிய நயினார், நீதிபதிகள் மீது இம்பீச்மென்ட் கொண்டுவந்தது மோசமான முன்னுதாரணம் என்று சாடினார். திருப்பரங்குன்றத்தின் புனிதத்தை காக்கவே பூர்ணசந்திரன் தீக்குளித்தார் என்றும், எவரும் அத்தகைய செயலை செய்யக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். அதேநேரம், தீபம் ஏற்ற வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது என்றும், அங்குள்ள பெண்கள் தீபம் ஏற்ற உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
வெளியூரில் இருந்து வருபவர்கள் சிக்கந்தர் மலை என்று அழைப்பதும், பிரியாணி எடுத்து வருவதும் திமுகவினரால் பரப்பப்பட்டவை என்று குற்றம்சாட்டிய நயினார், இது ஓட்டு வங்கி அரசியலுக்காக செய்யப்படுவதாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம்! மதக்கலவரத்தை துாண்டுகிறது திமுக! அண்ணாமலை ஆவேசம்!
அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து பேசிய அவர், இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதாகவும், தேர்தல் வாக்குறுதியை ஐந்து ஆண்டுகளாகியும் நிறைவேற்ற திமுகவுக்கு மனமில்லை என்றும் கூறினார்.

ஜாக்டோ-ஜியோ ஜனவரி 6 முதல் போராட்டம் நடத்த உள்ளதாகவும், சத்துணவு ஊழியர்களும் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் திமுக அரசு போராட்ட அரசாக மாறிவிட்டதாகவும், இதற்கு முடிவு தேர்தலில் வரும் என்றும் எச்சரித்தார்.
கூட்டணி விவகாரத்தில், தைப்பொங்கல் முடிந்த பிறகே கூட்டணி குறித்து தெளிவாகச் சொல்ல முடியும் என்று கூறிய நயினார், தற்போதைய கூட்டணியே மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், இன்னும் பல கட்சிகள் இணைந்தால் இன்னும் வலுவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் காசி தமிழ்ச் சங்கமத்தை பாராட்டிய அவர், இது வெறும் மாநாடு மட்டுமல்ல என்றும், தமிழ் பண்பாடு, கலாசாரத்தை உலகறியச் செய்யும் நிகழ்வு என்றும் கூறினார். தென்காசியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், புதுச்சேரி, ஐதராபாத் வழியாக காசி செல்லும் பயணம் தமிழுக்கு பெருமை சேர்ப்பதாகவும், நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடப்பதாகவும் தெரிவித்தார். இத்தகைய பிரதமரை முதல்வர் தொடர்ந்து விமர்சிப்பது தவறு என்றும் சாடினார்.
தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய நயினார், பாஜகவுடன் இணைவதே விஜய்க்கு பாதுகாப்பு என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியது நல்ல கருத்து என்றும், கரூரில் கூட விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
நயினாரின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இதையும் படிங்க: நயினாருக்கு இரண்டு முகம்!! கோட்சே பயிற்சி போல தமிழகத்தில் சதி! அப்பாவு வார்னிங்!