தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரான கவின்குமார், சென்னையில் ஒரு பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தவர். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், தனது தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு காரணமாக திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் அமைந்த சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.
மருத்துவமனை வாசலில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞர் கவினை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பிச் சென்ற சம்பவம், ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.விசாரணையில், இந்தக் கொலையை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர் செய்தது தெரியவந்தது.
சுர்ஜித், மணிமுத்தாறு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றும் சரவணகுமார் மற்றும் கிருஷ்ணவேனியின் மகன். கவின்குமார் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர், சுர்ஜித் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சம்பவத்திற்கு மையக் காரணமாக, கவின்குமார் சுர்ஜித்தின் அக்காவுடன் பேசியதாகவும், இதனை சுர்ஜித் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: தமிழகத்தை உலுக்கிய ஆணவ படுகொலை... சுர்ஜித் மீது பாய்ந்தது குண்டாஸ்!

கவின் மற்றும் சுர்ஜித்தின் அக்கா இடையே காதல் இருந்ததாகவும், இதற்கு சுர்ஜித்தின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுர்ஜித், கவினை வெட்டிக் கொலை செய்ததாக தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, பாளையங்கோட்டை காவல்துறையினர் சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்துள்ளனர்.
மேலும், சுர்ஜித்தின் பெற்றோரான சரவணகுமார் மற்றும் கிருஷ்ணவேனி இந்தக் கொலையில் தூண்டுதலாக செயல்பட்டதாக கவினின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். சாதி மோதல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எழக்கூடும் என்பதால், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே திருநெல்வேலியில் நடந்த சாதிய கொலைகள் குறித்து திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேசினார். அப்போது குற்றம் குற்றம்தான் என்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறினார். சாதி என்பது ஒரு உளவியல் பிரச்சனை என்று தெரிவித்த அவர் 21 ஆம் நூற்றாண்டிலும் சாதி மோதல்கள் நடப்பதை பார்ப்பது வெட்கக்கேடானது என தெரிவித்தார். எனவே சாதி தலைவர்கள் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் என்ன செய்யலாம் என்பது குறித்து அமர்ந்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டாரு.. பிரதமரின் உரை குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்..!