சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் மேற்கொண்ட செலவு விவரங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் தாக்கல் செய்துள்ள வரவு-செலவு கணக்கின்படி, திமுக ரூ.197.84 கோடியும், அதிமுக ரூ.112.39 கோடியும் தேர்தல் செலவாக கணக்கு காட்டியுள்ளன. இந்த விவரங்கள் தேர்தல் செலவு தொடர்பான அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.
திமுக தாக்கல் செய்துள்ள கணக்கின்படி, தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு கட்சியின் வங்கிக் கணக்குகளில் ரூ.365 கோடிக்கும் அதிகமான தொகை கையிருப்பில் இருந்துள்ளது. தேர்தல் காலத்தில் நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ரூ.126 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் திமுக மொத்தம் ரூ.197.84 கோடி செலவிட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் பிரசாரம் மற்றும் விளம்பரங்களுக்கு கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது. கட்சியின் வேட்பாளர்களுக்காக ரூ.47.95 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக vs தவெக? மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாறிய அரசியல் கணக்கு! உளவுத்துறை என்ன சொல்லுது!

மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்துக்காக ரூ.2.66 கோடியும், கூட்டணி சார்பில் பிரசாரம் செய்த கமல்ஹாசனுக்காக ரூ.3.24 கோடியும் செலவிடப்பட்டதாக திமுக கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பென்’ நிறுவனத்துக்கு ரூ.6.61 கோடி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் செலவுகள் முடிந்த பிறகு திமுகவிடம் ரூ.319.39 கோடி இருப்பதாக கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக தாக்கல் செய்துள்ள கணக்கின்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவை உள்ளடக்கிய தேர்தல் செலவு ரூ.112.39 கோடியாக உள்ளது. தேர்தல் காலத்தில் கட்சிக்கு ரூ.87.41 கோடி வருவாய் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் மொத்த செலவில் விளம்பரம் மற்றும் ஊடகப் பிரசாரத்துக்கு மட்டும் ரூ.103.98 கோடி செலவிடப்பட்டதாக கணக்கில் கூறப்பட்டுள்ளது. இதில் ‘பிரமான்யா ஸ்ட்ராட்டஜி கன்சல்டிங்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட தொகையும் அடங்கும். தேர்தல் முடிவில் அதிமுகவிடம் சுமார் ரூ.295.98 கோடி கையிருப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி தேர்தல் காலத்தில் ரூ.1.37 கோடி செலவு செய்துள்ளதாக கணக்கு தாக்கல் செய்துள்ளது. அதில் பிரசாரம் மற்றும் விளம்பரங்களுக்காக ரூ.93 லட்சமும், வேட்பாளர்களுக்காக ரூ.44 லட்சமும் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, ஒவ்வொரு கட்சியும் தாக்கல் செய்துள்ள கணக்கின் மாநில வாரியான வரம்பு வேறுபடுவதால், இந்த தொகைகளை நேரடியாக ஒப்பிடும்போது அந்த விவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செலவு அறிக்கைகள் மூலம் கட்சிகளின் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட கணக்குகள் படிப்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வருகின்றன.
இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!