ரேஷன் கடைகளில் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியின் தரம் குறைவாக இருப்பதால், அதன் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. விற்பனைக்காகக் கடைகளுக்கு அனுப்பப்பட்ட 439 டன் சன்னரக அரிசியில் இதுவரை 16 டன் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மளிகைப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து, நடுத்தர மக்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, மக்களால் அதிகம் விரும்பப்படும் பொன்னி உள்ளிட்ட சன்னரக அரிசியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, கிலோ ரூ.100-ஐ நெருங்கி வருகிறது.
இதையடுத்து, மலிவு விலையில் ரேஷன் கடைகள் மூலம் சன்னரக அரிசி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க... “இனி அரசே நேரடி விற்பனை”... சி.எம். விஜய் போட்ட அதிரடி உத்தரவு...!
ஆனால், சன்னரக அரிசி என்ற பெயரில் தரம் குறைந்த அரிசியைத் தமிழக அரசு விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சன்னரக அரிசி, பாலிஷ் செய்யப்பட்ட ரேஷன் அரிசியைப் போலவே இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “அங்கே போய்ப் பார்த்தால் அது ரேஷன் அரிசியாக இருக்கிறது. அதுவும் குண்டு குண்டாக இருக்கிறது. ரேஷன் அரிசியைத்தான் ரூ.30-க்கு விற்பதாகச் சொல்கிறார்கள். அரிசியை அள்ளிப் பார்த்தால் ரேஷன் அரிசியாக இருக்கிறது. முகர்ந்து பார்த்தால் வாடை அடிக்கிறது. அதனால் அரிசி வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து நிற்கிறேன்.”
“சன்னரக அரிசி என்று சொன்னார்கள். ஆனால், இது சன்னரக அரிசியே கிடையாது. குண்டு குண்டாக இருக்கிறது. ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைத்தான் ரூ.30-க்கு விற்கிறார்கள். நாங்களும் சிவாஜி நகரில் இருந்து 7 கிலோமீட்டர் தூரம் வந்து வாங்க முயற்சி செய்தோம். ஆனால், அரிசி சரியில்லை. ரேஷன் அரிசியைத்தான் ரூ.30-க்கு விற்பனை செய்கிறார்கள். இதுவும் குண்டு குண்டாக இருக்கிறது. சன்னரக அரிசி என்று சொல்லிவிட்டு, ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைத் தீட்டி விற்பனை செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. அரிசியில் வாடை அடிக்கிறது.”
அரிசியின் தரம் குறித்து பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தமிழக அரசு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யும் சன்னரக அரிசி தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கிடைக்கவில்லை என்றும், கடை ஊழியர்கள் தங்களை அலைக்கழிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கேட்டால் சிறப்பங்காடியில் விற்பனை செய்கிறோம், அமுதம் அங்காடியில் விற்பனை செய்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அங்கு போய்க் கேட்டால், ‘எங்களுக்கு இன்னும் ஆர்டர் வரவில்லை’ என்று கூறி அலைக்கழிக்கிறார்கள் என மக்கள் கூறுகின்றனர்.
“ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே, பண்டகசாலையில் ரேஷன் அரிசி ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், இப்போதுவரை அரிசியே வரவில்லை. நாங்கள் தொடர்ந்து வந்து பார்த்துவிட்டுச் செல்கிறோம். இதைக் கொஞ்சம் கவனித்து, அரிசியை விற்பனைக்குக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்” என குற்றச்சாட்டு
“அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பதால், நம்முடைய உள்ளூரிலேயே நல்ல தரமான அரிசியை வாங்கிச் சாப்பிடலாம் என்று நினைத்தோம். ஆனால், இப்போதுவரை அறிவிப்பு வெளியிட்ட நிலையில்தான் இருக்கிறது. கிராமப்புறங்களில் இன்னும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. எனவே, அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி, கிராமப்புறங்களில் கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் இந்த ரூ.30 அரிசித் திட்டத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.”
சன்னரக அரிசியின் தரம் குறைவாக இருப்பது மற்றும் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவது உள்ளிட்ட காரணங்களால், அமுதம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் விற்பனை நிலையங்களில் சன்னரக அரிசி விற்பனை மந்தமடைந்துள்ளது.
184 ரேஷன் கடைகளுக்கு விற்பனைக்காக 439 டன் சன்னரக அரிசி அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை வெறும் 16 டன் அரிசி மட்டுமே விற்பனையாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஐந்து நாட்களில் 184 விற்பனை நிலையங்கள் மூலம் 16 டன் சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?