தமிழ்நாடு அரசு 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை கடந்த மார்ச் 14ம் தேதி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில், தமிழ்நாட்டை தொழில்நுட்ப மையமாக உருவாக்கும் நோக்கில், 'தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம்-2030' திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் வடிவமைப்பை ஊக்குவிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு, 2030-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக, 'தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம்-2030' திட்டத்தை அறிவித்து, அதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: நாட்டின் 79வது சுதந்திர தினம்.. கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!
இத்திட்டம் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னையில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு, பரிசோதனை மையம் உருவாக்கப்படும் என்றும் கோவை மாவட்டத்தின் சூலூர், பல்லடத்தில் 100 ஏக்கரில் செமிகண்டக்டர் இயந்திர தொழில் பூங்கா உருவாக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மைக்ரோசிப் துறையில் தமிழ்நாட்டின் பங்களிப்பை பெருக்குவதற்காக, இத்திட்டம் சென்னை-ஓசூர்-கோயம்புத்தூர் பகுதியில் உயர்-தொழில்நுட்ப வழித்தடத்தை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. செமிகண்டக்டர் வடிவமைப்பு ஊக்குவிப்பு திட்டம், மையங்களை உருவாக்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் தொழில் பூங்காக்கள் அமைப்பது ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.
இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, மின்னணு உற்பத்தி சேவைகள் (EMS) மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை புத்துயிரூட்டுவதற்கு மாநில திட்டக்குழு பரிந்துரைத்துள்ளது. செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, பெட்ரோலிய வேதிம வளாகத்தில் செயற்கையிழை தயாரிப்பு தொகுப்பு மையம் நிறுவப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் தொழில்மயமாக்கல் கொள்கையின் கீழ், பத்திற்கும் மேற்பட்ட தொழில் தொகுப்பு மையங்கள் பொது வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன. இது தமிழ்நாட்டை உலகளாவிய தொழில்நுட்ப மையமாக உருவாக்குவதற்கு உதவும். முதலமைச்சர் தலைமையிலான மாநில திட்டக்குழு, இத்திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்தி, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு உறுதிபூண்டுள்ளது.
இத்திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தமிழ்நாடு உலகின் முன்னணி செமிகண்டக்டர் மையங்களில் ஒன்றாக உருவெடுக்கும் என்பது உறுதி.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஆலை குஜராத்துக்கு மாற்றம்.. மத்திய அரசை விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்..!