சட்டப்பேரவை சபாநாயகர் மு. அப்பாவு இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கம் குறித்துப் பெருமிதம் தெரிவித்த அவர், இந்தியத் தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசின் தலையீடு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக, தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் 'கலைஞர் உரிமைத் தொகை' திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். புதிய பயனாளிகள்: இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே சுமார் 1 கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் கிட்டத்தட்ட 16 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த வாய்ப்பை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மேலும், இந்த ₹1000 தொகை உயரும் என்றும், பயனாளிகளின் எண்ணிக்கையும் உயரும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளதாகக் கூறிய சபாநாயகர், இதற்காக முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: யாருமே இல்லாத இடத்தில் 63 வாக்குகள்... என்னப்பா விஷயம்? பறந்தது நோட்டீஸ்…!
தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, மத்திய அரசின் தலையீடு குறித்துக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார். தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சாசனம் சார்ந்தது. அது தன்னாட்சி பெற்ற அமைப்பாகச் செயல்பட்டு வந்தது. ஆனால், பிரதமர் அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரையும் நீக்கிவிட்டு, தன் அமைச்சரவையில் உள்ள ஒருவரை நியமித்து, தற்போது இந்தியத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் அவர்களை நியமித்திருக்கின்றார்கள்.
இப்போது தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருவர் (பிரதமர் மற்றும் ஒரு அமைச்சர்), ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்றார்கள். மேலும், தேர்தல் ஆணையர் "என்ன செய்தாலும் அவர் மீது வழக்குத் தொடர முடியாது" என்று ஒரு வார்த்தையையும் சட்டத்திருத்தத்தில் சேர்த்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சித் தன்மை பறிக்கப்பட்டுவிட்டதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் தேவையில்லை என்றும், பழைய வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "இனி தேர்தல் முறையே தேவையில்லை; EVM-ல் அவர்களே ஓட்டு போட முடிவெடுத்துக் கொள்ளலாம்" என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சபாநாயகர் மு. அப்பாவு உறுதியளித்தார்.
அது யாராலும் நடக்கக்கூடிய காரியமே இல்லை. தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சர் ஆவார். எந்தச் சக்தியாலும் அதை வீழ்த்த முடியாது. தமிழ்நாடு மக்கள் அவருடைய சீரிய திட்டங்களுக்கு நன்றிக்கடனாகத் தேர்தலிலே வெற்றிபெறச் செய்வார்கள். அவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பார். மேலும், தமிழகத்தில் பாஜக தலைவர்களின் சுற்றுப்பயணம் குறித்தும், அண்ணாமலை - ஓ.பி.எஸ் சந்திப்பு குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அவை தமிழகத்தில் எடுபடாது என்று அவர் பதிலளித்தார்.
இதையும் படிங்க: மக்களே லாஸ்ட் சான்ஸ்! இறுதிக்கட்டத்தை எட்டிய SIR பணிகள்! நாளை கடைசி நாள்!