தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. துணை கலெக்டர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான இந்த தேர்வில் 25 சதவீதத்துக்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குரூப்-1 பதவிகளில் முதற்கட்டமாக 26 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் துணை கலெக்டர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகள் இடம்பெற்றிருந்தன. பின்னர் கூடுதலாக 20 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டதால், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.
இந்த தேர்வை எழுதுவதற்காக தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 440 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 95,984 ஆண்கள், 1,27,441 பெண்கள் மற்றும் 15 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். மாநிலம் முழுவதும் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 1 லட்சத்து 65 ஆயிரத்து 828 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றுள்ளனர். இது 74.22 சதவீதமாகும்.
இதையும் படிங்க: சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

அதேநேரத்தில், 57,612 பேர் தேர்வுக்கு வரவில்லை. அதாவது 25.78 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. இதில் பொதுஅறிவுப் பகுதியில் 175 கேள்விகளும், திறனறிவு மற்றும் மனத்திறன் பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றன.
முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்னும் சுமார் 2 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் மற்றும் எதிர்பார்க்கப்படும் மதிப்பெண்களை கணக்கிட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்கான தயாரிப்பையும் தொடங்கியுள்ளனர். அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “ஆபாசமாக பேசுவது திமுகவின் மரபணுவில் உள்ளது” – உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் மரிய வில்சன் பதிலடி