குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு தனது வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் சிக்னல் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

காரின் முன் பகுதியிலிருந்து திடீரெனப் புகை வருவதைக் கண்ட செல்வகுமார், உடனடியாகச் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அவர் கீழே இறங்கிப் பார்ப்பதற்குள் கார் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. காரில் இருந்த தண்ணீரை ஊற்றி அவர் அணைக்க முயற்சி செய்தும் தீ மளமளவெனப் பரவியது.
இதையும் படிங்க: ஆந்திராவில் கோர விபத்து: வால்வோ பேருந்து டயர் வெடித்து 3 பேர் உடல் கருகி பலி!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தினால் அந்தப் பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு, சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் செல்வகுமார் காயமின்றி உயிர் தப்பினார்.
இந்தத் தீ விபத்து குறித்து பூந்தமல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா எனத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காஷ்மீர்: 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்..!! பறிபோன ராணுவ வீரர்களின் உயிர்..!!