பொள்ளாச்சி - வால்பாறை மலைப்பாதையில் இன்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மற்றும் கேரளா இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சென்ற வேன் ஒன்று 13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்தோரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரின் தல்மன்னா பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுமார் 16 பேர் ஒரு வேனில் வால்பாறைக்குச் சுற்றுலா வந்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
மலைப்பாதையின் 13-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலைத் தடுப்புகளை மோதி உடைத்துக் கொண்டு சுமார் 300 முதல் 800 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து உருண்டது. இது 9-வது வளைவுப் பகுதியில் வந்து நின்றது.
இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டுப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தமிழக - கேரள எல்லையில் நிகழ்ந்த இந்த விபத்து மலப்புரம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளா மற்றும் தமிழகக் காவல்துறையினர் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பச்சோந்திக்கே டஃப் கொடுக்கும் பழனிசாமி! வேலூர் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!