திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து, மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள போலீஸ் பூத்திற்குள் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞர் மதுரை நரிமேடு மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த பூர்ண சந்திரன் என்பது தெரியவந்துள்ளது. MBA பட்டாதாரியான இவர், மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றி வந்தார். இன்று பிற்பகல் மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே அமைந்திருந்த போலீஸ் பூத்திற்குள் பூர்ண சந்திரன் திடீரென நுழைந்துள்ளார். உள்ளே சென்ற அவர் கதவைப் பூட்டிக்கொண்டு, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
போலீஸ் பூத்திற்குள் இருந்து அலறல் சத்தத்துடன் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் அங்கு வந்திருந்த மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடனடியாகத் தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது, பூர்ண சந்திரன் உடல் கருகி சடலமாகக் கிடந்ததைக் கண்டு மீட்கப்பட்டார்.
இதையும் படிங்க: மதுரை ஆட்சியர் அலுவலகம் முதல் சிக்கந்தர் தர்கா வரை - தொடரும் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!
பூர்ண சந்திரன் இந்த விபரீத முடிவை எடுப்பதற்கு முன்னதாகச் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்துத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ள அவர், அதற்காகவே இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தல்லாகுளம் காவல்துறையினர் பூர்ண சந்திரனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரம் ஏற்கெனவே அரசியல் ரீதியாகவும் நீதிமன்ற ரீதியாகவும் விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், இந்தத் தற்கொலைச் சம்பவம் மதுரையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: "5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. மதுரைக்கு என்ன செய்தது?" - மெட்ரோ, எய்ம்ஸ் குறித்துத் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!