அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேநேரம், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அமெரிக்கா தனக்கு எதிராக போர் புனைவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே நீண்டகால பகை நிலவுகிறது. அதிபர் டிரம்பும் மதுரோவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில், பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில் சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு “ஆப்ரேஷன் சதர்ன் ஸ்பியர்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கரீபியன் கடலில் பல போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், 15 ஆயிரம் படையினரை அமெரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில், கரீபியன் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் வரும்போது மதுரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று டிரம்ப் கூறினார். ஆனால், பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: குறிவைத்து தாக்கப்படும் கப்பல்கள்! கரீபியன், பசிபிக் கடற்பகுதிகளில் அமெரிக்கா அட்டூழியம்!! ஐ.நா கண்டனம்!

இதற்கு பதிலளிக்கும் வகையில் வெனிசுலா அதிபர் மதுரோ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “அமெரிக்கா எனக்கு எதிராக ஒரு போரை புனைந்து வருகிறது. வெனிசுலா மக்கள் எந்த ஆக்கிரமிப்பிலிருந்தும் தங்கள் தாயகத்தைப் பாதுகாக்கத் தயாராக உள்ளனர். ஆனால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்” என்று அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் அமெரிக்கா நடத்திய 21 தாக்குதல்களில் 83 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ராணுவ நடவடிக்கைகள் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக என்று அமெரிக்கா கூறினாலும், வெனிசுலா அரசு இதை ஆக்கிரமிப்பு முயற்சியாகக் கருதுகிறது.
இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், பேச்சுவார்த்தை வாய்ப்பு பற்றிய டிரம்பின் அறிவிப்பு உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. வெனிசுலாவின் பொருளாதார நெர்க்கடி, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் ஆகியவை இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
இதையும் படிங்க: போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி... SIR- க்கு வலுக்கும் எதிர்ப்பு...! சீமான் அறிவிப்பு...!