திருச்சி விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு முக்கியமான பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும், வரும் தேர்தலில் விராலிமலை தொகுதியில் நீங்கள் போட்டியிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த செய்திகள் பல பத்திரிகைகளிலும், பெரிதும் மதிக்கப்படும் பத்திரிகைகளிலும் வெளியாகி வருகின்றன. ஆனால், அந்த செய்திகள் அனைத்தும் துளியும் உண்மை இல்லை. நாங்கள் ஏற்கனவே அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். கடந்த 8ஆம் தேதி கூட, திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டபோது, நான் மதுரையில் இருக்கிறேன் என்றும், 12ஆம் தேதி இரவு வந்துவிடுவேன் என்றும், 13ஆம் தேதி சந்திக்கலாம் என்றும் தெரிவித்தேன்.
அன்றைய தினம் கூட, பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகளை எங்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். அந்த அளவுக்கு எங்களுக்குள் தோழமை இருக்கிறது.
நாங்கள் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறோம். பழைய விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அம்மாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அண்ணா திமுகவுக்கு உறுதுணையாக இருக்கும்.
இதையும் படிங்க: போராட இடம் ஒதுக்குவது பெருமையா..? தூய்மை தேவதைகள்... புகழ்ந்தால் போதுமா CM.. TTV தினகரன் காட்டம்..!
இன்னொன்று, நான் ‘இலவு காத்த கிளி’ போல எந்தப் பதவியையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. நாங்கள் அனைவரும் அம்மாவின் தொண்டர்கள். அம்மாவின் பெயரில் இன்றைக்கு எங்கள் கட்சி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. அதனால், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் எதுவாக இருந்தாலும், அவை எனக்கும் புதிய செய்திகளாகத்தான் இருக்கின்றன.
இடைத்தேர்தலை நீங்கள் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, அண்ணா திமுக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில், அண்ணா திமுகவே போட்டியிடும். அவர்களுக்கு ஆதரவாக, வெற்றியை நோக்கி அவர்கள் வெற்றி பெறுவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஏதேனும் ஆலோசனை இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பது நல்ல யோசனை எனத் தெரிவித்துள்ள அவர், கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் கலந்தாலோசித்து பொதுவேட்பாளர் குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் ரேஸில் விஜய்... ஒரே வார்த்தையில் ஜோலியை முடித்த டிடிவி தினகரன்... கருத்துக்கணிப்பு குறித்த கமெண்ட் தான் ஹைலைட்டே...!