அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதில் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதிலும் சுகாதாரத்துறை காட்டிய அலட்சியமே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினார். முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படும் மருத்துவத்துறையின் அலட்சியப் போக்கே இந்த சோக நிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பு அதிகரித்த பின்னரே நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையைக் கைவிட்டு, பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு சுகாதாரத்துறைக்கு உண்டு என்பதை இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தொடரும் மின்வெட்டு..! தத்தளிக்கும் தமிழகம்... வலுக்கும் கண்டனம்..! கொந்தளித்த TTV.!!.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, டெங்குவால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும் தமிழ்நாடு அரசையும் அவர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் பொதுமக்களும் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும் எனவும் டி.டி.வி. தினகரன் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!