தமிழகத்தில் அதிகரிக்கும் சட்டவிரோதச் செயல்களால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். அண்டை நாடுகளுக்குக் கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாக திமுக நிர்வாகி ஒருவர் கைதாகியிருக்கும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆளுங்கட்சி ஆதரவோடு நடைபெறும் சட்டவிரோத மதுபான விற்பனையும், எந்தவித தடங்கலுமின்றி தமிழகத்திலிருந்து அண்டை நாடுகளுக்குக் கடத்தும் அளவிற்கான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கமும் தான் திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாக அமைந்திருக்கிறது என்று சாடியுள்ளார்.
இதையும் படிங்க: சும்மா தெறிக்குதுல்ல..! EPS பெயரை உச்சரித்த TTV..! அரங்கம் அதிர தொண்டர்கள் உற்சாகம்..!
தமிழகத்தில் அரங்கேறும் குற்றச்சம்பவங்களிலும், சட்டவிரோதச் செயல்களிலும் ஏதேனும் ஒருவகையில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பதும், அவர்களின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறை தயங்குவதும் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அடியோடு சிதைக்கச் செய்திருக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழகத்திற்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எப்படி வருகிறது ., அண்டை நாடுகளுக்குக் கடத்தப்படுவதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்., என்பதைக் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்திடுவதோடு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கும் சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அதிருப்தி... அவ்ளோ சொல்லியும் கேட்கல..! திமுகவில் இணைந்த மாணிக்கராஜா பரபரப்பு பேட்டி..!