2026 சட்டமன்றத் தேர்தலை பாஜக கூட்டணியுடன் இணைந்து அதிமுக சந்திக்க உள்ளது. மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரை எடப்பாடி பழனிச்சாமி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது பாஜக கூட்டணியை தூக்கி உயர்த்தி பிடித்து எடப்பாடி பழனிச்சாமி அவ்வப்போது பேசுகிறார். திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி., ஆனால் அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக தீய கட்சி என சித்தரிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் என எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தின் போது பேசியதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுத்து பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்எல்ஏக்கள் தானே தவிர பாஜக அல்ல எனக் கூறினார்.

சசிகலா கூறியதால் தான் 122 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்ததாக குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தவர் இபிஎஸ் என்று டிடிவி தினகரன் கூறினார். நன்றி மறக்காமல் இருப்பதால்தான் பாஜகவுடன் கூட்டணி என இபிஎஸ் பேசியதை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிச்சாமி நன்றியை பற்றி பேசுகிறார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொதுச்செயலாளர் பதவிக்காக எடப்பாடி பார்த்த உள்ளடி வேலை... முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்...!
எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்றும் ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்ததால்தான் இபிஎஸ் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார் எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு? - எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!