தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு தீவிர தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னையில் நேற்று நடந்த தமிழக மகளிர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாநில தலைவி ஹசீனா சையது தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டசபை தேர்தலில் மகளிர் காங்கிரஸுக்கு 33 சதவீத தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மகளிர் ஓட்டுகளை ஈர்க்க பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. வட மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பெண்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டு பெண் ஓட்டுகள் கவரப்பட்டதை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழகத்திலும் இதே பாணியில் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் 5 லட்சம் நாப்கின்கள் வாங்கப்பட உள்ளன. இவை மகளிர் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் மாணவியர், இளம்பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்-ஐ கூட சேர்க்கலாமா? வேணாமா? உளவுத்துறை கொடுத்த அறிக்கை! திமுக மாஸ்டர் ப்ளான்!

பீஹார் தேர்தலில் ராகுல் காந்தி படம் அச்சிடப்பட்ட நாப்கின்கள் வழங்கப்பட்டபோது பா.ஜ.க. தரப்பில் விமர்சனம் எழுந்தது. அதன்பிறகு ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி படங்கள் இணைந்த நாப்கின்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் இதே போல் ராகுல் படம் போட்ட நாப்கின்களை வழங்க மாநில தலைவி ஹசீனா சையது மறுத்துவிட்டார். ஆண் உருவம் படம் போட்ட நாப்கின்களை பெண்கள் பெற கூச்சப்படுவார்கள் என்ற கருத்து எழுந்தது. எனவே பிரியங்கா காந்தி சாயலில் உள்ள பெண் உருவம் அச்சிடப்பட்ட நாப்கின்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மாணவியர் மற்றும் இளம்பெண்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று கட்சியினர் நம்புகின்றனர்.
மகளிர் ஓட்டுகள் தமிழக தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பதால், இத்தகைய திட்டங்கள் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 33 சதவீத ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறினால் மகளிர் காங்கிரஸ் வேட்பாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இந்த தீர்மானங்கள் கட்சியின் தேர்தல் உத்தியில் பெண்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 10 தொகுதி போதும்! இறங்கி வந்த தேமுதிக! காங்கிரசை கழட்டி விட நேரம் பார்க்கும் திமுக! மாறும் கூட்டணி கணக்கு!