ஓட்டப்பிடாரம் அருகே உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி 8 விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும் வென்றான் பகுதியில் தனியார் நிறுவனத்தின் சோலார் மின் உற்பத்திக்காக விவசாய நிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த மின்பாதை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, 8 விவசாயிகள் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எப்போதும் வென்றான் – பசுவந்தனை செல்லும் சாலை அருகே சூர்யா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்காக உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எப்போதும் வென்றான் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் முருகன், கண்ணம் உடையார், முருகப்பெருமாள், சோலையப்பன், சோலைமுத்து, சண்முகராஜ், முத்துச்சாமி உள்ளிட்ட 8 பேர் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எப்போதும் வென்றான் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சோளம், உளுந்து, மலர் வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாரிமுத்து, கிருஷ்ணன், சோலைமுத்து, பிச்சாண்டி உள்ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்களின் வழியாக உயர் மின்னழுத்த வயர்களை கொண்டு செல்லும் பணிகள், விவசாயிகளின் அனுமதியின்றி நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.1 கோடி கேட்டு நகைக்கடைக்கு மிரட்டல்... பசும்பொன் மக்கள் தேசம் கட்சி தலைவர் கைது.!!
மேலும், உயர் மின்னழுத்த வயர்கள் விவசாய நிலங்களின் வழியாக செல்வதால், மழைக்காலங்களில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் உயிர் அச்சத்துடன் விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு, விவசாயப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத மாற்று வழித்தடத்தில் உயர் மின்னழுத்த மின்பாதையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!