ஈரோடு விஜயமங்கலத்தில் இன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தனது தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நெகிழ்ச்சி கலந்த நன்றி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
"என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்" எனத் தனது வழக்கமான பாணியில் தொடங்கியுள்ள அவர், அரசியல் பயணத்தில் தனக்கு ஏற்படும் சவால்களையும், ஈரோடு மண்ணில் தனக்குக் கிடைத்த உற்சாக வரவேற்பையும் அதில் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
எத்தனை கட்சிகள் ஆண்டாலும் வறுமையின் பிடியில் இருக்கும் மக்களுக்கு இன்னும் விடிவு காலம் வரவில்லை என்றும், மக்களின் கனவுகள் வெறும் ஏக்கங்களாகவே முடிந்துவிடக் கூடாது என்பதற்காகவே தனது அரசியல் பயணம் தொடங்கியதாகவும் விஜய் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போலீஸுக்கு சுதந்திரம் இல்லை… 2026-ல் இந்த நிலை மாறும் – அருண் ராஜ் உறுதி
தடைகளை முறியடித்தல்: தவெக-வின் பயணத்தில் இதுவரை தெரிந்தும், தெரியாமலும் எவ்வளவோ தடைகள் வந்திருப்பதாகவும், மக்களின் தூய அன்பின் துணையோடு அந்தத் தடைகள் அனைத்தையும் முறியடித்து வெற்றி பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஞ்சள் மாநகரான ஈரோட்டில் இன்று கிடைத்த ஆதரவு, தனது வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாக அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பிரம்மாண்ட கூட்டத்தைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. கே.ஏ. செங்கோட்டையன், பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகளுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர்கள் M. பாலாஜி, M. வெங்கடேஷ், A. பிரதீப்குமார் மற்றும் தன்னார்வலர்களின் உழைப்பையும் அவர் பாரட்டியுள்ளார். குறிப்பாக, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பைச் சிறப்பாக மேற்கொண்ட காவல் துறைக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ள விஜய், "வெற்றி நிச்சயம், மீண்டும் சந்திப்போம்" எனத் தனது அறிக்கையை நம்பிக்கையுடன் நிறைவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: நாளை ஈரோடு வரும் விஜய்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! பறந்த அதிரடி உத்தரவு..!!