தமிழ்நாட்டில் உள்ள தெற்கு ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் உள்ள 6,171 தொழிற்பழகுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலேயே தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை இல்லையா என்றும், ஒன்றிய அரசின் புறக்கணிப்பிற்கு தமிழ்நாடு அரசும் துணைபோகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூர் கேரேஜ் மற்றும் வேகன் பணிமனை, பெரம்பூர் லோகோ பணிமனை, கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை, போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு ரயில்வே பிரிவுகளில் இந்த அப்ரண்டிஸ் வாய்ப்புகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ரயில்வே பணிமனைகளில் உள்ள வாய்ப்புகளைப் பெறுவதற்கு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்காமல், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் போட்டியிடும் வகையில் விதிமுறைகளை மாற்றுவது கடும் கண்டனத்திற்குரியது என அவர் கூறினார்.

குறிப்பாக, கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு தொடர்பான நிபந்தனை தற்போதைய அறிவிப்பில் இடம்பெறவில்லை என்ற தகவல் பல்வேறு ஐயங்களை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டின் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று பல்வேறு தொழில்நுட்பத் தகுதிகளைப் பெற்று வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு முதலில் வாய்ப்பு வழங்குவதுதானே நியாயம் என்றும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ரயில்வே பணிமனைகளில் உருவாகும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குக் கூட தமிழக இளைஞர்கள் பிற மாநில இளைஞர்களுடன் போட்டியிட வேண்டிய நிலையை உருவாக்குவது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.தமிழ்நாட்டின் நிலத்தையும் கட்டமைப்பையும் மக்களின் வரிப்பணத்தையும் பயன்படுத்திச் செயல்படும் மத்திய அரசின் நிறுவனங்களில் உருவாகும் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு மக்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஒரே எண்ணிக்கையில் கொலைகள்..! வெறும் 100 நாளில் எப்படி சரி செய்ய முடியும்..? உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆதவ்..!!
தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 90 விழுக்காடு பணியிடங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும், அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே கோட்டங்கள் மற்றும் பணிமனைகளில் உருவாகும் வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 90 விழுக்காடு வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.தற்போதைய அப்ரண்டிஸ் நியமன அறிவிப்பில் விதிமீறல் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரித்து, அறிவிப்பில் செய்யப்பட்டுள்ள விதிமாற்றங்களுக்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என அவர் கோரினார்.
மேலும், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டிருந்தால், அந்த மாற்றங்களை உடனடியாகத் திரும்பப் பெற்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் திருத்தப்பட்ட அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும் மௌனம் காக்காமல், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பாதுகாக்க ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: "தாய்மாமன் காது குத்தும் திட்டம்"..! வாக்குறுதி என்னாச்சு..? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி..!!