தருமபுரி மாவட்டம் பாலக்கோடுவில் அரசுப் பள்ளிக்கு அருகில் 'மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் புதிதாகத் தனியார் மதுபானக் கூடம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபானக் கூடம் அமையவிருக்கும் இடத்தில் அருகில் ஒரு காய்கறி மார்க்கெட்டும் செயல்படுகிறது. இந்தப் பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் பெண்கள், குழந்தைகள் வந்து செல்வதால், மதுபானக் கூடம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என எதிர்ப்புகள் கிளம்பின. இந்தக் மதுபானக் கூடத்தை உடனடியாக அகற்றக் கோரித் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தக் காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முற்பட்டதால், காவல்துறையினருக்கும் தவெகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்ய முயன்றபோது, தவெக தொண்டர் ஒருவர் காவல்துறையினரின் கையைக் கடித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: "பாஜகவில் குடியேறியவர் தானாகவே வெளியேறுவார்" - நயினார் நாகேந்திரனை விமர்சித்த ஆர்.எஸ். பாரதி!
சமூக நலன் கருதி மதுபானக் கூடத்தை அகற்றக் கோரிப் போராடியதை ஒருபுறம் பாராட்டி வந்தாலும், தொண்டர் போலீஸ் கையைக் கடித்த சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தவெக-வினர் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 16, 2025 அன்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்காகத் தனிப்பட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "பாமக-வைக் கைப்பற்ற சதி!" ஜி.கே. மணி மற்றும் அவரது மகனுக்கு எதிராகப் பாமக வழக்கறிஞர் பாலு புகார்!