தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரையில், அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டுமே கட்சி செயல்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக, தேர்தல் வெற்றிக்குப் பிறகு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், குறிப்பாக கேரளாவின் சில மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக அலுவலகங்கள் திறக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதனைத் தொடர்ந்து, இன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிழக்கு பர்த்வான் மாவட்டம் பகுபூர் பகுதியில் தவெக அலுவலகம் திறக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள இந்த அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி திறப்பு விழா நடத்தப்பட்ட காட்சிகளும் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!
இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய், இணை ஒருங்கிணைப்பாளர் சஜய் டி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தவெக உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தவெக ஆட்சி அமைத்த பின்னர், அங்குள்ளவர்கள் தாங்களாகவே கட்சி அலுவலகங்களைத் திறந்து வருகின்றனர். ஆனால், அந்த மாநிலங்களில் இருந்து யாரும் பொறுப்பாளர்களாக தமிழக வெற்றிக் கழகத்தால் நியமிக்கப்படவில்லை என்றும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. இதைத் தாண்டி பிற மாநிலங்களில் தொடங்கப்படும் கட்சி அலுவலகங்களில் பொறுப்பாளர்களாக இதுவரை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யாரும் அறிவிக்கப்படவில்லை என்றும் கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெங்கு பரவல் அதிகரிப்பு! பள்ளி மாணவிகள் பாவாடைக்கு பதில் சல்வார், சுடிதார் அணிய அனுமதி!