தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், தமிழகத்தில் நல்லாட்சியையும் தூய்மையான ஆட்சியையும் தங்கள் கட்சியால் மட்டுமே வழங்க முடியும் என உறுதியாகத் தெரிவித்தார். பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“மக்களின் மனதில் புதிய ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என்பது தீவிரமான கனவாக இருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மக்கள் சக்தி முழுமையாக அவருக்குப் பின்னால் உள்ளது” என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

தற்போது தவெக சார்பில் கோபி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் முடிவை அறிவித்த அவர், “கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்து வந்துள்ளேன். இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வோம்” என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்! பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு!
முன்னாள் அதிமுக நிர்வாகியான செங்கோட்டையன், “சாதாரண உறுப்பினராகக் கூட இருக்கக் கூடாது என்று அதிமுகவில் இருந்து என்னைத் தூக்கி எறிந்தனர். அதனால்தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறேன்” என்று கூறினார்.
மேலும், “மக்கள் தீர்ப்பின் மூலம் எஸ்.பி.வேலுமணியின் கருத்துகள் அனைத்தும் தூள்தூளாக்கப்படும்” என்று தெரிவித்த அவர், “ஜெயலலிதா உள்ளிட்ட பல முன்னணி தலைவர்களும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ள வரலாறு உள்ளது” என்று சுட்டிக்காட்டினார். தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தவெகவின் பயணம் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், மக்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சியை அமைப்பது உறுதி என்றும் செங்கோட்டையன் நம்பிக்கை வெளியிட்டார்.
இதையும் படிங்க: பாஜக-வை எதிர்க்காதவர் எப்படி மக்களைக் காப்பார்? விஜய்யை விளாசிய அருட்தந்தை சார்லஸ் குமார்!