தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது.
இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு 20 லட்ச ரூபாய் விஜய் நிவாரணம் அறிவித்தார். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல்., நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை என்றும் கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன் என கூறினார்.
இதையும் படிங்க: 10 நிமிஷம் கரண்ட் கட்... மிதிச்சு உயிரே போச்சு... உண்மையை போட்டு உடைத்த பெண்...!

நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன என்றும் பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது எனவும் கூறினார்.
சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன் எனவும் உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூருக்கு உதவ மத்திய அரசு தயார்… உதவிக்கரம் நீட்டிய அமித் ஷா…!