தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.
இதையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்., கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: புலி வேட்டைக்கு போகையில குறுக்க அணில் ஓடுது... TVK-வை கலாய்த்து தள்ளிய சீமான்
மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மனசாட்சி உள்ள மக்களாட்சி என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம் என்றும் மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம்., எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம் எனவும் கூறியுள்ளார்.
உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன் என்றும் உங்கள் விஜய், உரிமையுடன் அழைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பக்கா பிளான்! மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்ல ட்ரோன்... தவெக மாநாட்டு பணிகள் மும்முரம்